Thursday, March 31, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :كالميت بين يدي الغاسل، والطفل الرضيع في يدي الظئر، والكرة بين يدي الفارس يقلبها بصولجانه، فيقلبك القدر كيف يشاء، إن كان النعماء فمنك الشكر والثناء ومنه عزَّ وجلَّ المزيد في العطاء، كما قال تعالى : }لَئِن شَكَرْتُمْ لأَزِيدَنَّكُمْ{.إبراهيم7. وإن كان البأساء فالصبر والموافقة منك بتوفيقه والتثبت والنصرة والصلاة والرحمة منه عزَّ وجلَّ بفضله وكرمه، كما قال عزَّ من قائل: }إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ{.البقرة153.الأنفال46. بنصره وتثبيته، وهو لعبده ناصر له على نفسه وهواه وشيطانه

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: குளிப்பாட்டுபவர் கையில் கிடக்கும் மையித்தைப் போலும், பாலூட்டும் தாயிடம் கிடக்கும் குழந்தையைப் போலும், குதிரை மீது வரும் விளையாட்டுக் காரனால் அடிக்கப் படுவதற்காக கிடக்கும் பந்தைப் போலும், நீ ஏதும் கேளாது, மனத்திருப்தியும், பொருத்தமும் கொண்டவனாய் அவனிடம் சரணடைந்து இருப்பாய். தெய்வ விதிப்பு தன விருப்பப்படி உன்னைத் திருப்பும். அது பாக்கியமானதாய் இருப்பின், நீ நன்றியும், புகழும் தெரிவிப்பாய். அதற்காக அல்லாஹ்விடமிருந்து அதிகமான பாக்கியம் உண்டாகும். "நிச்சயமாக நீங்கள் நன்றியுடனிருப்பின், உங்களுக்கு நான் அதிகமாக அருளுவேன்" (14 : 7 ) என்று அல்லாஹ்வே கூறியுள்ளான். தெய்வவிதிப்பு தருவது பாக்கியமானதாய் இன்றி கஷ்டமானதாய் இருப்பின், அதை ஏற்று அல்லாஹ் தரும் பலத்தின் உதவியால் பொறுமையுடன் இருந்து வருவாய். "நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்" ( 2 :153 ) என்று அல்லாஹ்வே கூறியுள்ளதுபோல, உன் பொறுமை காரணமாக உனக்குக் கருணையையும் பாக்கியத்தையும் அருளுவான். அதாவது, அவன் பொறுமை உடையவர்களுக்குத் தன் உதவியையும் பலத்தையும் அனுப்புவான்.

Wednesday, March 30, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :فالصبر الصبر، الرضا الرضا، حفظ الحال حفظ الحال، الخمول الخمول، الخمود الخمود، السكوت السكوت، الصموت الصموت، الحذر الحذر، النجا النجا، الوحا الوحا، الله الله ثم الله، الإطراق الإطراق الإغماض الإغماض الحياء الحياء إن يبلغ الكتاب أجله، فيؤخذ بيدك فتقدم وينزع عنك ما عليك ثم تغوص في بحار الفضائل والمنن والرحمة ثم تخرج منها فتخلع عليك الأنوار والأسرار والعلوم والغرائب المدنية، ثم تقرب وتحدث فيه بإعلام وإلهام وتكلم وتعطى وتغنى وتشجع وترفع، وتخاطب

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: பொறுமையைக் கைக்கொள், மனப்பூர்வமாக அடிபணியப் பழகிக்கொள்; இப்போதுள்ள நிலைக்கு மதிப்பளி, யாரும் அறியாத நிலையை அடை; அமைதியாய் இரு; மௌனமாய் இரு, எச்சரிக்கை! தப்பித்துக்கொள்வதில் எச்சரிக்கை! சீக்கிரம்! அல்லாஹ்வுக்கு அஞ்சு! மீண்டும் அல்லாஹ்வுக்கு அஞ்சு! உன் பார்வையைக் கீழ் நோக்கச் செய்! உன் பார்வையைக் கீழ் நோக்கச் செய்! உன் கண்களைத் திருப்பு! உன் கண்களைத் திருப்பு! நாணத்துடன் நடந்துகொள்! விதிவசம் தனக்குரிய நேரத்தை அடையும்வரை, உன்கையைப் பிடித்து உன்னை முன்னணிக்கு இழுத்துக் கொண்டு வரும்வரை இவ்வித நிலையிலேயே இரு!

அதன்பின், நீ பாரமாகக் கருதியவை யாவும் உன்னை விட்டு அகற்றப்படும்; அருள்மாரி, கருணை, பரிவு என்ற கடலிலே நீ மூழ்கடிக்கப்படுவாய். மெய்ஞானத்தாலும், தெய்வ ரகசியங்களாலும், ஒளியாலும் நீ சூழப்பட்டவனாவாய். அப்போது நீ அருகில் உள்ளவனாகவும், வசனிக்கப்படுபவனாகவும், நன்கொடைகள் பெறுபவனாகவும், தேவைகளற்றவனாகவும், திடமும் உன்னதப் பதவியும் பெற்றவனாகவும், வார்த்தைகளால் விளிக்கப்படுபவனாகவும் ஆகிவிடுவாய்.

Tuesday, March 29, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :لا تكشف البرقع والقناع عن وجهك حتى تخرج من الخلق وتوليهم ظهر قلبك في جميع الأحوال ويزول هواك، ثم تزول إرادتك ومناك، فتفنى عن الأكوان دنيا وأخرى، فتصير كإناء منثلم لا يبقى فيك غير إرادة ربك عزَّ وجلَّ فتمتلئ به عزَّ وجلَّ وبحكمه، إذا خرج الزور دخل النور، فلا يكون لغير ربك في قلبك مكان ولا مدخل وجعلت بواب قلبك، وأعطيت سيف التوحيد والعظمة والجبروت، فكل من رأيته دنا من ساحة صدرك إلى باب قلبك ندرت رأسه من كاهله فلا يكون لنفسك وهواك وإرادتك ومناك في دنياك وأخراك عندك رأس امتثال ولا كلمة مسموعة، لا أرى متبع إلا إتباع أمر الرب عزَّ وجلَّ، والوقوف معه والرضا بقضائه وقدره، بل الفناء في قضائه وقدره، فتكون عبد الرب عزَّ وجلَّ وأمره لا عبد الخلق وآرائهم

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: முதலில் நீ சிருஷ்டிகளை விட்டு வெளியாக வேண்டும்; வாழ்க்கையின் சகலவித நிலைகளிலும் உன் இதயம் அவற்றின் பக்கம் திரும்பாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்; அதன் மூலம் உன் ஆசைகள் மறைய வேண்டும்; அதன்பின் உன் நோக்கமும் அதன்பின் உன் தாபமும் மறையவேண்டும்; அப்போது நீயே இம்மை மறுமையினுடைய ஜீவிதத்திலிருந்து மறைந்து விடுவாய்; நீ ஓட்டைப் பாண்டமாகி, உன் ரட்சகனின் நோக்கமன்றி வேறு எந்த நோக்கமும் தங்காததாக ஆகிவிடுவாய்; உன் ரட்சகனின் ஒளி உன்னை நிறைக்கும். உன் ரட்சகனுக்கன்றி, வேறு எதற்கும் உன் இதயத்தில் இடமிருக்காது; நீ உன் இதயத்தின் வாயில் காப்போன் ஆகிவிடுவாய்; அப்போது உன் கையில் ஏகத்துவம் எனும் வாளும், மகத்துவமும், சக்தியும் உண்டாகியிருக்கும். இந்த நிலையை நீ எய்தினாலன்றி உன் கீழான மனத்தின் மீதுள்ள திரையும், மறைப்பும் அப்பால் அகற்றப்படமாட்டா. அதன்பின் உன் உள்ளத்தின் சூழ்நிலையில் இருந்து உன் இதயத்தை நோக்கி எது வரினும் வாயில்காப்போனான நீ உன் வாளால் அதன் தலையை உடலிலிருந்து துண்டித்து எறிய முடியும். அதன் மூலம் உன் கீழான மனதுக்கும், ஆசைக்கும், நோக்கத்துக்கும் இவ்வுலக மறு உலகப் பேற்றுக்கான தாபத்துக்கும் எதுவும் தலை தூக்காது செய்வாய். ரட்சகனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதையும், அவனைப் பற்றி நிற்றலையும், அவன் கட்டளையை மனமுவந்து ஏற்றலையும், அவன் சித்தத்தில் சம்பூரணமாக மூழ்குதலையும் தவிர வேறு எந்த வார்த்தைக்கும் செவிசாய்க்கவோ அபிப்பிராயம் கூறவோ இடம் வைக்கமாட்டாய். இவ்விதம் நீ ஜனங்களுடையவும் அவர்கள் அபிப்பிராயங்கள் உடையவும் அடியானாகாது அல்லாஹ்வின் அடியானாகி விடுவாய்.

Monday, March 28, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :وعلامة فنائك عن إرادتك بفعل الله أنك لا تريد مراداً قط , ولا يكون لك غرض, ولا يبقى لك حاجة ولا مرام, فإنك لا تريد مع إرادة الله سواها, بل يجري فعل الله فيك, فتكون أنت عند إرادة الله وفعله ساكن الجوارح مطمئن الجنان منشرح الصدر منور الوجه عامر البطن غنياً عن الأشياء بخالقها, تقلبك يد القدرة, ويدعوك لسان الأزل, ويعلمك ربُّ الْمِلَلْ, ويكسوك أنواراً منه والحلل, وينزلك من أولي العلم الأول

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: இறைவன் செயலால் நீ உன் சித்தத்தை விட்டும் விலகுவதாவது: நீயாக எந்த முடிவையும் செய்யக்கூடாது; நீயாக எந்த நோக்கத்தையும் உண்டாகிக் கொள்ளக்கூடாது; உன்னிடம் அல்லாஹ்வின் நோக்கமே முற்றும் நிறைந்திருக்க வேண்டும். அந் நிலையில் அல்லாஹ்வின் திருச்சித்தம் உன்னில் வெளிப்படும். அதனால் அல்லாஹ்வின் செயலும் சித்தமும் செயல்படுகையில், உன் உடலிலுள்ள சகல அங்கங்களும் செயலற்றும், இதயம் அமைதியுற்றும், மனம் விரிந்தும் அகத்தே இன்பம் பொங்கும்; நீ அவனுடன் தொடர்புள்ளவனாக ஆவதால் எப்பொருளின் தேவையும் இல்லாதவனாக ஆவாய். சக்தியின் கரம் உன்னை அசையச் செய்யும்; சாஸ்வதத்தின் நாவு உன்னை அழைக்கும்; சர்வலோக ரட்சகன் உனக்குப் போதனை புரிவான். தன்னிடமுள்ள வெளிச்சத்தாலும் ஆத்ம உடையாலும் உன்னை உடுத்தாட்டுவான்; கடந்த கால ஞானவான்களின் வரிசையில் உன்னையும் சேர்ப்பான்.

Sunday, March 27, 2011

முஹியுத்தீன் ஆண்டகை உதய தின விழா

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் குத்புகள் திலகம் முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு தினம் ஆத்ம சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அவர்களின் மவ்லிது ஷரீபும் அதனைத் தொடர்ந்து அவர்களின் மீது இயற்றப்பட்ட புகழ் பாக்களை தலைவர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் பாடினார்.

முஹியுத்தீன் ஆண்டகை அவர்களின் உபதேசங்கள் என்ற தலைப்பில் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி அவர்களும் குருவிடம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ற தலைப்பில் தலைவர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்களும் உரைநிகழ்த்தினார்கள்.

துஆவுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. இப்புனித வைபவத்தில் ஏராளமான முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து கொண்டு ஈருலக பேற்றையும் பெற்றனர். அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இருவு உணவு வழங்கப்பட்டது.

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :ثم ذنوب وآثام وإجرام وتلويثات بأنواع المعاصي والخطيئات ولا يصلح لمجالسة الكريم إلا الطاهر عن أنجاس الذنوب والزلات, ولا يقبل على سدته إلا طيباً من درن الدعاوى والوهوسات، كما لا يصلح لمجالسة الملوك إلا الطاهر من الأنجاس وأنواع النتن والأوساخ، فالبلايا مكفرات مطهرات قال النبي صلى الله عليه وسلم : (حمى يوم كفارة سنة) صدق رسول الله صلى الله عليه وسلم.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: மனிதனின் அகத்தில் பல வகைப்பட்ட பாவங்களும் குற்றங் குறைகளும் நிறைந்திருப்பதால் அல்லாஹ்வின் தோழமைக்கு அவன் லாயக்கற்றவனாய் இருக்கிறான். இப்பாவங்களின் அசுத்தத்தை அவன் முற்றும் கழுவிக்கொண்டாலன்றி அவன் அல்லாஹ்வின் நட்பைப் பெற இயலாது. ஒரு சாதாரண அரசனோடு நெருங்கிப் பழகவே ஒருவன் துர்நாற்றத்தையும், அழுக்கையும், மாசுகளையும் அகற்றியவனாக வர வேண்டியதிருக்கும்போது, தான் எனும் அகந்தையிலிருந்து தன்னைப் பரிசுத்தம் செய்பவன் மட்டுமே அல்லாஹ்வின் சந்நிதானத்தை முத்தமிட முடிவதில் வியப்பில்லை அல்லவா! இவ்விதம் கஷ்டங்கள் உன்னைப் பரிசுத்தம் ஆக்குபவையாகவும், பாவம் நிவர்தியடையச் செய்பவையாகவும் இருக்கின்றன. நவி பெருமான் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "ஒருவருஷம் செய்த பாவத்துக்கு ஒரு நாள் ஜூரம் பாவ நிவர்த்தி அருளுவதாய் இருக்கிறது" என்று.

Friday, March 25, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அன்பர்களே, அல்லாஹ்வின் அவ்லியாக் (நண்பர்) களை அலட்சியம் செய்வதானது மெய்ஞானம் குறைவதற்க்குரிய வழியாகும். அத்தகைய நல்லோர்கள் மீது குறை கூற முற்பட்டு விடுகிறீர்கள். "இவர்கள் ஏன் எங்களுடன் நெருங்கிப் பழகாதிருக்கிறார்கள், ஏன் எங்கள் சகவாசத்தில் அமரப் பின்வாங்குகிறார்கள்" என்று கூறுகிறீர்கள். இவ்வாறெல்லாம் நீங்கள் கூறுவதற்குக் காரணம், நீங்கள் உங்களையே அறியாதிருப்பதுதான். தன்னையறியாதிருந்தால், பதவிகளின் தராதரங்களும் தெரியாதே இருக்குமேனலாம். உங்கள் உலகையும் அதன் பலாபலனையும் மெய் காணாதிருக்கும் அளவுக்கு உங்களுடைய மறுமைபற்றியும் அறியாதிருப்பீர்கள்; மறுமை பற்றிய அறியாமை இருக்குமளவுக்கு மெய்ப்பொருள் பற்றிய ஞானமும் இல்லாமலேயே இருக்கும்.

உலக மாயையில் மூழ்கிக்கிடப்பவர்களே, விரைவிலேயே இம்மையிலும் மறுமையிலும் நஷ்டங்களின் வாயில்கள் உங்கள் முன் திறக்கப்பட விருக்கின்றதென்பதை உணருங்கள். உங்கள் கேடுகெட்ட நிலைமை கியாம நாளில் பகிரங்கமாக வெளியாக இருக்கின்றதென்பதையும் உணருங்கள். கியாம நாளோ உங்களுக்கு நஷ்ட நாளாக, அவமான நாளாக இருக்குமென்பதை உணருங்கள். மறுமை வருமுன் உங்கள் நப்ஸிடம் கணக்குக் கேளுங்கள். உலகில் காணப்படும் தெய்வ அன்பையும் இரக்கத்தையும் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம். பாவங்களிலும் கலகங்களிலும் அநியாயங்களிலும் கேடுகெட்டவர்களாய் தரிபட்டு நிற்காதீர்கள். சிலருக்கு மரணத்துக்கு முன் ஜூரம் வந்து மரணத்தின் முன்னறிவிப்பாக இருப்பதுபோலப் பாவங்கள் 'குபிரு' க்குரிய முன்னறிவிப்புகளாய் இருக்கின்றன. மரணம் வருமுன், ஆத்மாக்களைக் கைப்பற்றும் 'மலக்கு' வருமுன் பாவங்களிலிருந்து மீட்சி பெற்றுக் கொள்ளுங்கள்.

Thursday, March 24, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : و قد ورد في حديث عائشة رضي الله عنها ( أنها سألت النبي صلى الله عليه و سلم هل يدخل أحد الجنة بعمله؟ فقال لا برحمة الله، فقالت و لا أنت؟ فقال و لا أنا إلا أن يتغمدني الله برحمته و وضع يده على هامته ) و ذلك لأن الله عزَّ و جلَّ لا يجب عليه لأحد حق و لا يلزمه الوفاء بالعهد، بل يفعل ما يريد يعذب من يشاء و يغفر لمن يشاء، و يرحم من يشاء، فعال لما يريد و لا يسال عما يفعل و هم يسئلون، يرزق من يشاء بغير حساب بفضل رحمته و منته، و يمنع من شاء بعدله

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் நபி பெருமான் (ஸல்) அவர்களிடம் 'தன் செயல்களால் மட்டும் யாராவது சொர்க்கம் புகுவார்களா? என்று வினவினார்கள். அதற்கு நபி பெருமான் (ஸல்) அவர்கள், 'மாட்டார்கள், அல்லாஹ்வின் கருணை கிட்டினாலன்றி' என்று பதிலளித்தார்கள். இதற்கு ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள், 'நீங்கள் கூடவா?' என வினவினார்கள். 'ஆமாம், அல்லாஹ் தன் கருணையால் என்னைப் பொதிந்தாலன்றி, நானுங்கூடத்தான் (சொர்க்கத்தில் நுழைய முடியாது)' என்று பெருமானார் பதிலளித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் கரத்தைத் தங்கள் சிரசின்மீது வைத்துக் காட்டினார்கள். அல்லாஹ்வுக்கு எதிராக யாருக்கும் எவ்வுரிமையும் கிடையாது; எந்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அவனுக்கு இல்லை என்று காட்டவே நபி பெருமான் (ஸல்) அவர்கள் இவ்விதம் செய்தார்கள். அவன் தன் சித்தப்படி நடக்கிறான். தான் விரும்பியவர்களை அவன் தண்டிக்கிறான். தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் விரும்பியவர்கள் மீது கருணை பொழிகிறான். தான் விரும்பியவர்களுக்கு நன்கொடைகள் அருளுகிறான்; தன் விரும்பியதைச் செய்ய அவன் சர்வ சத்தனாக உள்ளான். அவன் செய்வது பற்றி யாரும் வினவக்கூடாது; ஆனால், அவன் தன் அடியார்களிடம் கேள்வி கணக்குக் கேட்பான். தான் விரும்பியவர்களுக்குத் தன் அருளாலும் கருணையாலும் படி அளக்கிறான். தன் நீதியை நிலைநாட்டுவதில், தன் விருப்பப்படி சிலரிடமிருந்து தன் அருட்கொடைகளை அகற்றவும் செய்கிறான்.

Wednesday, March 23, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : فإن أكثر ما ينزل بابن آدم من أنواع البلاء بشكواه من ربِّه عزَّ وجلَّ. كيف يشتكى منه عزَّ وجلَّ وهو أرحم الراحمين, وخير الحاكمين, حكيم خبير, رؤوف رحيم, لطيف بعباده, وليس بظلام للعبيد, كطبيب حكيم حبيب شفيق لطيف قريب هل تتهم الوالدة الرحيمة, قال النبي صلى الله عليه وسلم : (الله أرحم بعبده من الوالدة بولدها). أحسن الأدب يا مسكين, تصبّر عند البلاء إن ضعفت على الصبر, ثم اصبر إن ضعفت عن الرضا والموافقة

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஆதமின் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளில் மிகப் பல அவர்கள் இறைவனைப் பற்றிக் குறைகூறுவதால் வருவனவேயாகும், யாராயினும் அவன் மீது குறை கூறுவது என்ன நியாயம்? அவன் கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்; நீதிபதிகளுக்கும் உன்னதமான நீதிபதி, பொறுமையின் பொக்கிஷம், அருள் சொரிபவன்; தன் அடியானிடம் அன்பாய் இருப்பவன்; தன் அடியானுக்குப் பாசமான உறவினனாயும் பொறுமையும், அன்புப் பரிவும் மிகுந்த வைத்தியனாயும் விளங்குகிறான். பாச மிக்க அன்பு இதயம் கொண்ட ஒரு தந்தையிடமோ தாயிடமோ நீ குறை காண முடியுமா? நம் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "ஒரு தாய் தன் மகனிடம் காட்டுவதைவிட அதிகமாக அல்லாஹ் தன் அடியானிடம் கருணை காட்டுபவனாய் இருக்கிறான்" என்று. ஓ ஏழையே, உயர்ந்த பட்ச நல்ல ஒழுக்கமுடையவனாய் இரு! துயரம் நேர்கையில் உன் பொறுமையெல்லாம் எல்லை கடந்துவிடினும் பொறுமையுடன் இரு! உன் மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வுக்கு அடிபணிவதன் மூலம் பொறுமையைப் பற்றிப் பிடித்தவனாய் இரு! அவனிடம் காட்டும் இசைவையும், மனப்பூர்வமான பணிவையும் பற்றிப் பிடித்தவனாய் இரு! இன்னும் அதிகத் திருப்தியும் சமாதானமும் அடைந்தவனாகு.

Tuesday, March 22, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : فكيف يبتلى المحبوب و يخوف المدلل المراد و لم يكن ذلك إلا بما أشرنا إليه من بلوغ المنازل العالية في الجنة لأن المنازل في الجنة لا تشيد و لا ترفع بالأعمال في الدنيا. الدنيا مزرعة الآخرة، و أعمال الأنبياء و الأولياء بعد أداء الأوامر و انتهاء النواهي و الصبر و الرضا و الموافقة في حالة البلاء يكشف عنهم البلاء و يواصلون بالنعيم و الفضل و الدلال و اللقاء أبد الآباد، و الله أعلم

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: தனது சிறந்த அடியார்களை, தனக்கு மிகவும் பிரியமானவர்களை அல்லாஹ் அவ்வளவு சோதனை செய்வதும், அவர்களுக்கு அதிகமாக அச்சமூட்டுவதும் ஏன்? நாம் ஏற்கனவே, குறிப்பிட்டபடி இதன் நோக்கம் அவர்களை வானின் உயரிய பதவிகளை அடையுமாறு செய்வதுதான். இம்மையில் செய்யப்படும் நன்மையான செயல்களின் மூலமன்றி, மறு உலக வாழ்க்கையின் தரம் உயர்த்தப்படமாட்டாது. இம்மையின் வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான பயிர் செய்யும் நிலம்தான். நபிமார்களுடையவும், இறைநேயர்களுடையவும் நற்செயல்கள் ஏவல், விலக்கல்களின்படி ஒழுகி, சோதனை இடையில் பொறுமையுடனும், மனப்பொருத்தத்துடனும், மகிழ்வுடனும் இருப்பதுதான். அதன்பின் அச்சோதனை அவர்களை விட்டு அகற்றப்பட்டு, அல்லாஹ்வின் பாக்கியங்களையும், நல்லருல்களையும், பாதுகாப்பையும் அவர்கள் அனுபவிக்குமாறு செய்யப்படுகிறது. அவர்கள் தங்கள் இறைவனின் சந்நிதானத்தை நிரந்தரமாய் அடையும்வரை இவ்வாறு அருளப்படுகிறது.

Monday, March 21, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة: قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ما أكثر ما تقول كل من أحبه لا تدوم محبتي إياه فيحال بيننا إما بالغيبة أو بالموت أو بالعداوة وأنواع المال بالتلف والفوات من اليد، فيقال لك : أما تعلم يا محبوب الحق المعنى المنظور إليه المغار عليه، ألم تعلم أن الله عزَّ وجلَّ غيور خلقك وتروم أن تكون لغيره உபதேசம்: அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: "நான் யார் மீது அன்பு கொண்டிருந்தாலும் அது நீடிப்பதில்லை. விலகுவதாலோ, மரணத்தாலோ, பகைமையாலோ, பாழாவதாலோ, பண நஷ்டத்தாலோ, பிருவு எங்களிடையே புகுந்து விடுகிறது" என்று எத்தனையோ தடவை நீ கூறி வந்துள்ளாய் அல்லவா! ஓ அல்லாஹ்வின் மீது மெய்விஸ்வாசம் கொண்டவனே, உன் மீது நன்கொடைகளைச் சொரிந்துள்ள, உன் விஷயத்தில் அக்கறை காட்டியுள்ள அல்லாஹ்வும் பொறாமை உடையவன்தான் என்பதை நீ அறியாயா? இதை நீ கேள்விப்பட்டதில்லையா? அவன் உன்னைத் தனக்காகவே படைத்துள்ளான்; நீயோ அவனையன்றி வேறு யாருக்கோ உரித்தானவனாக விரும்புகிறாய்.

Sunday, March 20, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة: قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا وصلت إلى الله قربت بتقريبه وتوفيقه، ومعنى الوصول إلى الله عزَّ وجلَّ خروجك عن الخلق والهوى والإرادة والمنى, والثبوت مع فعله ومن غير أن يكون منك حركة فيك ولا في خلقه بك، بل بحكمه وأمره وفعله, فهي حالة الفناء يعبر عنها بالوصول

உபதேசம்: அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வை நெருங்கி, அவன் கவர்ச்சியாலும் உதவியாலும் அவனுக்கு அருகில் ஆகும்போது- அதாவது நீ படைப்புகளையும், உன் ஆசையையும், நோக்கத்தையும் விட்டு அப்பாலகி அவன் செயலிலும், நோக்கத்திலும் இணைந்தவனாகி, அதில் அவன் உத்தரவோ, செயலோ, கட்டளையோ இன்றி உன்னிடமோ உன் மூலமோ எந்த அசைவுமே இல்லாது ஆகும் அந்த சந்நிதான நிலை எய்தியதும், ('பனா' என்ற) நாஸ்தி நிலையை நீ அடைந்துவிடுகிறாய்.

Saturday, March 19, 2011

சங்கைமிகு மீலாத்


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் நபிகள் கோமான் (ஸல்) அவர்களின் மீலாது விழா வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மவ்லித் ஓதப்பட்டது.

விழாவினை கிராத் ஓதி துவங்கி வைக்கின்றார் ஆத்ம சகோதரர் பெரம்பலூர் G. சம்சுதீன் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.

அதற்கடுத்தபடியாக ஏகந்தப் பாடல் மற்றும் வஹ்ததுல் வுஜூது பைதினை ஆத்ம சகோதரர் தலைவர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி (பாகவி) அவர்களும் மற்றும் ஆத்ம சகோதரர் M. முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி அவர்களும் மிக அழகாய் பாடினார்கள்.

அடுத்ததாக நபிப்புகழ் பாவினை குவைத் சபையின் பிரதான பாடகர் M. முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார்.

விழாத்தலைவர் முன்னுரை:

முதல் அமர்வில் பேச்சாளர்களின் வரிசையில் முறையே ஆத்ம சகோதரர்கள் விஜயகோபாலபுரம் நத்ஹர்ஷா, பெரம்பலூர் முஹம்மது, சென்னை முஹம்மது ஹாஷிம், மன்னார்குடி ஹிதாயத்துல்லாஹ் மற்றும் விஜயகோபாலபுரம் முபாரக் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து மக்ரிப் தொழுகைக்குப் பின் ரபீஉல் ஆகிர் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது.

மீலாது விழா தொடர்ச்சியின் இரண்டாம் அமர்வில் முறையே ஆத்ம சகோதரர்கள் பெரம்பலூர் அமானுல்லாஹ், எசனை அப்துல் அஜீஸ் உலவி, ஆலிம் அமீர் பாட்சா மற்றும் திருச்சி முஹம்மது மீரான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

நன்றி உரை சபையின் ஆலோசகர் ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக யா நபியல்லாஹ் பைத் ஓதப்பட்டது.

இவ்வைபவத்தில் அனைத்து முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து சிறப்பித்து ஈருலகப் பேற்றையும் பெற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு தப்ரூக் மற்றும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்களுடைய இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Friday, March 18, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة: قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا فني العبد عن الخلق و الهوى و النفس و الإرادة و الأماني دنيا و أخرى و لم يرد إلا الله عز و جل و خرج الكل عن قلبه وصل إلى الحق، و اصطفاه و اجتباه، و أحبه و حببه إلى خلقه، و جعله يحبه و يحب قربه، و يتنعم بفضله و يتقلب في نعمه و فتح عليه أبواب رحمته، و وعده أن لا يغلقها عنه أبداً

உபதேசம்: அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியான் சிருஷ்டிகளை விட்டும் இச்சையை விட்டும், தன் கீழான மனத்தை விட்டும், நோக்கத்தையும், இம்மை மறுமையின் ஆசைகளையும் விட்டும் மறைந்ததும், அவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நாடமாட்டான். சகலமும் அவன் மனத்தைவிட்டு மறைந்துவிடுகின்றன. இதன் பின்னரே தன்னை பொறுக்கியெடுக்கும், அன்பு பாராட்டும், தன் மீது சிருஷ்டிகள் யாவும் அன்பு செலுத்தும்படி செய்யும் அல்லாஹ்வின் சமீபத்துவத்தையும் பெற்று அதில் புரளுகிறான். அல்லாஹ் தன் கருணைக் கதவுகளை அவனுக்குத் திறந்து விடுகிறான், அதை மீண்டும் ஒருக்காலும் அடைப்பதில்லை என்றும் வாக்களிக்கிறான்.

Thursday, March 17, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة: قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا أعطاك الله عزَّ وجلَّ مالاً فاشتغلت به عن طاعته حجبك به عنه دنيا وأخرى, وربما سلبك إياه وغيرك وأفقرك لاشتغالك بالنعمة عن المنعم, وإن اشتغلت بطاعته عن المال جعله موهبة ولم ينقص منه حبة واحدة وكان المال خادمك وأنت خادم المولى, فتعيش في الدنيا مدللاً وفي العقبى مكرماً مطيباً في جنة المأوى مع الصديقين والشهداء والصالحين.

உபதேசம்: அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹுத் தஆலா உனக்குச் செல்வத்தைத் தந்ததும், நீ அதனால் அவனுக்குப் பணிவதிலிருந்தும் கவனம் திருப்பப்பட்டவனானால், அது காரணமாக இம்மை மறுமை இரண்டிலுமே அவனை நீ காண முடியாதவாறு உன் முன் திரையை இட்டு விடுகிறான். உனக்குச் சன்மானம் தந்தவனிடம் நன்றி காட்டாது, தரப்பட்ட பொருளின் கவனத்திலேயே நீ மூழ்கிக் கிடைப்பதற்குத் தண்டனையாக, அவன் உனக்குத் தந்த சம்மானங்களை பறித்து, உன் நிலையையே மாற்றி, உன்னைத் தரித்திரனாக்குவதும் அவன் செய்யக்கூடிய காரியந்தான். ஆனால், நீ அவனுக்குப் பணிவதில் ஈடுபட்டு அச்செல்வத்தைப் பற்றிய அக்கரையற்றவனாய் இருப்பின், அதை அல்லாஹ் உனக்கு ஏகபோகமாக விட்டு விடுவதுடன், ஓர் அணுக்கூட அதில் குறைவு வரவும் இடந்தர மாட்டான். செல்வம் உன் அடிமை; நீ உன் ரட்சகனின் அடிமை. எனவே, இவ்வுலகில் அவனுடைய அன்புப் பாதுகாவலிலும், மறுமையில் கவுரவத்தோடும், சுகத்தோடும், நிரந்தரமான சொர்க்கத்திலும், ஸித்தீகீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடைய கூட்டத்தில் நீ வாழ வேண்டும்.

Wednesday, March 16, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ما أعظم تسخطك على ربّك و تهمتك له عزَّ وجلَّ، و اعتراضك عليه و انتسابك له عزَّ وجلَّ بالظلم، واستبطائك في الرزق والغنى وكشف الكروب والبلوى، أما تعلم أن لكل أجل كتاب، ولكل زيادة بلية وكربة غاية منتهى ونفاد، لا يتقدم ذلك ولا يتأخر، أوقات البلايا لا تقلب فتصير عوافى ووقت البؤس لا ينقلب نعيما، وحالة الفقر لا تستحيل غنى. أحسن الأدب وألزم الصمت والصبر والرضا والموافقة لربك عزَّ وجلَّ، وتب عن تسخطك عليه وتهمتك له في فعله.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: உன் இறைவனிடம் நீ கோபம் கொள்வதும், அவன் மீது குறை கூறுவதும், அவனை நிந்திப்பதும், அவன் நீதியோடு நடக்கவில்லை, உணவு அளிப்பதிலும் துயர்களை நீக்குவதிலும் தாமதம் செய்கிறான் என்று பழிப்பதும் விசித்திரமாய் இல்லையா? ஒவ்வொரு சம்பவத்துக்கும் உரிய நேரம் ஒன்று உண்டு. ஒவ்வொரு துயரத்துக்கும் படவேண்டிய கால அவகாசம் ஒன்று உண்டு என்று நீ அறிவாயா! இவற்றை முந்தவோ பிந்தவோ முடியாது.துயரம் அனுபவிக்க வேண்டிய காலம் சுகம் அனுபவிப்பதற்கு உரியதாகவும் கஷ்டமான நேரம் வசதியானதாகவும் ஆகாது. உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடி. மௌனமாகவும் பொறுமையாகவும், மனப்பூர்வமான பணிவோடும் உன் இறைவனின் போக்கை அறிந்து தன்மையோடும் இருந்துவா! அல்லாஹ்விடம் கோபம் கொண்டதற்காகவும் அவன் செயல் குறித்து அவன் மீது குறை கூறியதற்காகவும் பாவமீட்சி தேடிக்கொள்!.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 11) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tuesday, March 15, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ليس الشرك عبادة الأصنام فحسب, بل هو متابعتك هواك، وأن تختار مع ربك شيئاً سواه من الدنيا وما فيها والآخرة وما فيها, فما سواه عزَّ وجلَّ غيره، فإذا كنت إلى غيره فقد أشركت به عزَّ وجلَّ غيره, فاحذر ولا تركن, وخف ولا تأمن, وفتش فلا تغفل فتطمئن, ولا تضف إلى نفسك حالاً ومقاماً.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: இணைவைப்பது என்பது விக்ரஹ வணக்கம் மட்டுமன்று; உடல் இச்சையின்படி நடப்பதும், இம்மை மற்றும் மறுமைக்குரிய எதையும் அல்லாஹ்வோடு சேர்த்துப் பேசுதலும் கூட இணைவைப்பதுதான். ஏனெனில், அல்லாஹ்வை அன்றி வேறு எதுவும் அல்லாஹ் ஆகாது. அவனை அல்லாத எதிலும் நீ ஈடுபட்டிருக்கும்போது, நீ அந்தப் பொருளை அவனோடு இணைவைப்பவனாகிறாய் என்பதில் ஐயமில்லை. எனவே, எச்சரிக்கையாய் இரு; அயர்ந்து விடாதே! அஞ்சு; பாதுகாப்பு உணர்ச்சியுடன் இருந்து விடாதே! தேடு; அலட்சிய பாவத்தோடு இருந்து விடாதே! அப்படியானால்தான் நீ பாதுகாப்புப் பெற முடியும். உனது எந்த நிலையும் அந்தஸ்தும் உன் கீழான மனத்தின் காரணமாக உண்டானது என்று கூறாதே!.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 10) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Monday, March 14, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : وإذا تركت النفس بطلب شهوة من شهواتها ولذة من لذاتها من القلب فأجابها القلب إلى مطلوبها ذلك من غير أمر من الله تعالى وإذن منه حصلت بذلك غفلة عن الحق تعالى وشرك ومعصية، فعمهما الله تعالى بالخذلان والبلايا وتسليط الخلق،والأوجاع والأمراض والإيذاء والتشويش، فينال كل واحد من القلب والنفس حظ..

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: மனிதனிடமுள்ள கீழான மனம் இச்சைக்கும் போகத்துக்கும் உரிய எந்த ஒரு பொருளையும் தேடும்படி இதயத்தைத் தூண்டி, இதயமும் அதற்கு இணங்கி அல்லாஹ்வின் கட்டளையோ அனுமதியோ இன்றி அதில் ஈடுபடுமாயின், அதன் பயனாய் அல்லாஹ்வை மறப்பதும், இணைவைத்தலும், மற்றப் பாவங்களும் வந்து சேருகின்றன. இத்தகைய இதயத்துக்கு அவமானமும், துயரங்களும், ஜனங்களுக்கு அடிமைப்படும் தன்மையும், புண்படுத்தலும், ஆவலும், வேதனையும், நோயும் உண்டாகும்படி அல்லாஹ் செய்து விடுகிறான்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 9) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Sunday, March 13, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : مالي أراك يا مؤمن حاسداً لجارك في مطعمه ومشربه وملبسه ومنكحه ومسكنه وتقلبه في غناه ونعم مولاه عزَّ وجلَّ وقسمه الذي قسم له؟ أما تعلم أن هذا مما يضعف إيمانك ويسقطك من عين مولاك عزَّ وجلَّ ويبغضك إليه؟ أما سمعت الحديث المروى على النبي صلى الله عليه وسلم أنه قال : (قال الله تعالى في بعض ما تكلم به: الحسود عدو نعمتي) وما سمعت قول النبي صلى الله عليه وسلم : (إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: மெய்விஸ்வாசியே, உன் அண்டை வீட்டான் உண்பதையும், குடிப்பதையும், மணப்பதையும், வசிப்பதையும், செல்வத்தில் திளைப்பதையும், தன் எஜமானன் அளித்ததை அனுபவிப்பதையும் கண்டு நீ ஏன் பொறாமை கொள்கிறாய்? அதனால் உன் மெய்விஸ்வாசம் பலஹீனப்படுவதை நீ அறியாயா? எஜமானின் பார்வையில் நீ மதிப்புக் குறைந்தவனாகி அவன் வெறுப்புக்கு ஆளாவதை நீ உணர வேண்டாமா? "பொறாமைக்காரன் நம் பாக்கியத்தின் பகைவன்" என்ற அல்லாஹ்வின் வாக்கை நபி பெருமான் (ஸல்) அவர்கள் வெளியிட்டுள்ளதை நீ கேள்விப்பட்டதில்லையா? "நெருப்பு விறகை உண்பது போல நிச்சயமாகப் பொறாமை நற்பண்புகளை உண்டு விடுகிறது" என்று நபி பெருமான் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நீ அறியாயா?

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 8) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Saturday, March 12, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ومن وقف على الرخص ولم يتقدم إلى العزيمة إن سلب عنه التوفيق فقطعت عنه أمداده فغلب الهوى عليه وشهوات النفس، فتناول الحرام خرج من الشرع، فصار في زمرة الشياطين أعداء الله عزَّ وجلَّ الضالين عن سبل الهدى، فإن أدركته المنية قبل التوبة كان من الهالكين إلا أن يتغمده الله تعالى برحمته وفضله، فالخطر في القيام مع الرخص، والسلامة كل السلامة مع العزيمة.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: தன் கடமையான காரியங்களையும் செய்யாது ஆரம்பத்திலேயே ஓய்வடைந்தவனாய் இருப்பவனோ, அவனுக்குத் தரப்பட்ட பாக்கியங்கள் பறிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் உதவியிலிருந்தும் துண்டிக்கப் பட்டவனாவான். கீழான ஆசைகளும் மிருக இச்சைகளும் அவனை ஆட்கொள்ளும்; சன்மார்க்க நெறி முறைக்கு முரணாக நடப்பான்; அல்லாஹ்வின் பகைவர்களான ஷைத்தான்கள் கூட்டத்தில் சேருவான். நேர்மையான பாதையை விட்டு வெகு தூரம் விலகிப் போவான். இந்த நிலையில் வருத்தப்பட்டு திருந்துமுன் அவன் இறந்தால் அல்லாஹ் தன் கருணையால் அவனை மறைத்தாலன்றி, அவன் அழிந்துபட்டவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவனேயாவான். எனவே ஓய்வாக இருப்பதால்தான் சகல ஆபத்துக்களும் உண்டாகின்றன; கடமையான காரியங்களைச் செய்வதில்தான் பாதுகாப்பு உண்டு என்பதை உணர்ந்துகொள்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 7) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.