Friday, March 25, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அன்பர்களே, அல்லாஹ்வின் அவ்லியாக் (நண்பர்) களை அலட்சியம் செய்வதானது மெய்ஞானம் குறைவதற்க்குரிய வழியாகும். அத்தகைய நல்லோர்கள் மீது குறை கூற முற்பட்டு விடுகிறீர்கள். "இவர்கள் ஏன் எங்களுடன் நெருங்கிப் பழகாதிருக்கிறார்கள், ஏன் எங்கள் சகவாசத்தில் அமரப் பின்வாங்குகிறார்கள்" என்று கூறுகிறீர்கள். இவ்வாறெல்லாம் நீங்கள் கூறுவதற்குக் காரணம், நீங்கள் உங்களையே அறியாதிருப்பதுதான். தன்னையறியாதிருந்தால், பதவிகளின் தராதரங்களும் தெரியாதே இருக்குமேனலாம். உங்கள் உலகையும் அதன் பலாபலனையும் மெய் காணாதிருக்கும் அளவுக்கு உங்களுடைய மறுமைபற்றியும் அறியாதிருப்பீர்கள்; மறுமை பற்றிய அறியாமை இருக்குமளவுக்கு மெய்ப்பொருள் பற்றிய ஞானமும் இல்லாமலேயே இருக்கும்.

உலக மாயையில் மூழ்கிக்கிடப்பவர்களே, விரைவிலேயே இம்மையிலும் மறுமையிலும் நஷ்டங்களின் வாயில்கள் உங்கள் முன் திறக்கப்பட விருக்கின்றதென்பதை உணருங்கள். உங்கள் கேடுகெட்ட நிலைமை கியாம நாளில் பகிரங்கமாக வெளியாக இருக்கின்றதென்பதையும் உணருங்கள். கியாம நாளோ உங்களுக்கு நஷ்ட நாளாக, அவமான நாளாக இருக்குமென்பதை உணருங்கள். மறுமை வருமுன் உங்கள் நப்ஸிடம் கணக்குக் கேளுங்கள். உலகில் காணப்படும் தெய்வ அன்பையும் இரக்கத்தையும் கண்டு ஏமாற்றமடைய வேண்டாம். பாவங்களிலும் கலகங்களிலும் அநியாயங்களிலும் கேடுகெட்டவர்களாய் தரிபட்டு நிற்காதீர்கள். சிலருக்கு மரணத்துக்கு முன் ஜூரம் வந்து மரணத்தின் முன்னறிவிப்பாக இருப்பதுபோலப் பாவங்கள் 'குபிரு' க்குரிய முன்னறிவிப்புகளாய் இருக்கின்றன. மரணம் வருமுன், ஆத்மாக்களைக் கைப்பற்றும் 'மலக்கு' வருமுன் பாவங்களிலிருந்து மீட்சி பெற்றுக் கொள்ளுங்கள்.